ஏரிஆக்கிரமிப்புகள் அகற்றம்
விசலூரில் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே விசலூர் ஊராட்சியில் 66 ஏக்கர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுமார் 10 ஏக்கர் அளவுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், துணைத்தலைவர் அழகாபுரி மற்றும் விசலூர் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story