வேடசந்தூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு


வேடசந்தூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 May 2022 10:27 PM IST (Updated: 16 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பள்ளி ஆசிரியை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி கற்பகம் (47). குஜிலியம்பாறை அருகே பாப்புலுபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களின் மகன்கள் சுதாகரன், பாஸ்கரன். இவர்கள் திண்டுக்கல், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கற்பகம் வேலைக்கு சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றனர். இதையடுத்து ராஜ்மோகன் வீட்டை பூட்டிவிட்டு ஒட்டன்சத்திரம் அருகே புளியமரத்துகோட்டையில் உள்ள தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.
20 பவுன் நகை திருட்டு
பின்னர் மதியம் ராஜ்மோகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடுபோய் இருந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசுக்கு ராஜ்மோகன் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். விசாரணையில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள கோவில், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேடசந்தூரில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story