கொல்லிமலையில் கனமழை: ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


கொல்லிமலையில் கனமழை: ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 16 May 2022 11:00 PM IST (Updated: 16 May 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சேந்தமங்கலம்:
தொடர்மழை
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சுற்றுலா வருகின்றனர். 
கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்அருவி, மாசிலா அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் அங்கு சீஷன் களைகட்ட தொடங்கி உள்ளது.
வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் கொல்லிமலையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, நம்அருவி, மாசிலா அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல தண்ணீர் கொட்டியது. 
இதனை பார்த்து உற்சாக மடைந்த சுற்றுலா பயணிகள், தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story