தோவாளையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் உருவம் சிக்கியது


தோவாளையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் உருவம் சிக்கியது
x
தினத்தந்தி 16 May 2022 11:11 PM IST (Updated: 16 May 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

தோவாளையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி, 
தோவாளையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம் 
தோவாளை தேவர்நகர் பகுதியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் உள்ளது. இந்த பகுதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். 
இந்தநிலையில், நேற்று காலையில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க இந்த மையத்திற்கு வந்தார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் வெளிப்பக்க கண்ணாடி உடைந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வங்கி அதிகாரிகள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் திருடு போகவில்லை என தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி
அதன் பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு சட்டை இல்லாமல் தாடி வளர்ந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைகிறார். அந்த நபர் முதலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயல்கிறார். ஆனால், முடியவில்லை. 
உடனே, ஒரு கல்லை எடுத்து ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி மீது எறிகிறார். இதில் கண்ணாடி சுக்குநூறாக உடைகிறது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 
காயமடைந்த நபர்
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு தோவாளையில் உடலில் காயங்களுடன் ஒருவர் நின்றுள்ளார். அவரை அந்த பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 
அந்த நபர் தான் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என்றும், அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story