ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உள்பட 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு
கூடுதல் நிதி ஒதுக்கக்கூறி, முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உள்பட 8 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் பழனிவேலு (தி.மு.க.) பேசுகையில், எங்கள் வார்டுகளுக்கு ரூ.10 லட்சம் அளவிலேயே நிதி வழங்கப்பட்டுள்ளது ஆனால், மற்ற ஊர்களில் ரூ.40 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
தற்போது வரும் பொது நிதியையும் தன்னிச்சையாக டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கே ஒதுக்கீடு செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயம்?. வரும் ஆண்டிலும் இதே நிலைதான் ஏற்படும். ஆகவே, எங்களுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து இந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
8 உறுப்பினர்கள் வெளிநடப்பு
அதனைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் பழனிவேலு, மோகன், கல்யாணசுந்தரம், தேவகி, ராதா, யசோதா, ரோஜாபானு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் சுமதி ஆகிய 8 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1½ மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு பொதுநிதி மற்றும் 15-வது நிதிக்குழு மானிய நிதி ஆகியவற்றிலிருந்து வார்டுக்கு தலா ரூ.10 லட்சம் வரை கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டதால் கூட்டம் தொடர்ந்து நடந்தது. பின்னா் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை முன் வைத்து பேசினர்.
அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ.4 கோடியும், காவலர் தங்கும் மண்டபம் கட்ட ரூ.13 கோடியும், அலையாத்தி காட்டை மேம்படுத்த ரூ.4 கோடியும், இடும்பாவனம் சற்குணநாத கோவில் குளத்தை சீரமைக்க ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story