நெல் வயலில் மீன் வளர்க்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில், நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், பெரியார் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நெல் வயல்களில் மீன் வளர்ப்பு
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம், நபார்டு வங்கியுடன் இணைந்து காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டம் நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய 4 ஒன்றியங்களில், ஒரு ஒன்றியத்திற்கு 3 பயனாளிகள் வீதம் மொத்தம் 12 பேரின் வயல்களில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆழ்துளை கிணறு வசதியுள்ள, ஒரு எக்டேர் நிலத்தில் 9 மீட்டர் மேற்பரப்பு அகலத்திலும், 4 மீட்டர் அகலத்திலும் மற்றும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு அகழ்ந்து, மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
மீதமுள்ள 4,500 சதுர அடியில், பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா அல்லது கருப்புகவுனி ரகங்கள் மட்டும் பயிர் செய்யப்பட வேண்டும்.
மீன் குஞ்சுகள்
இந்த திட்டத்திற்கு தேவையான மீன் குஞ்சுகள், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை வழி இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட விவசாயிகள் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த நிலத்தை 5 ஆண்டுகளுக்கு வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விண்ணப்பதாரர் பெயரில் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வயல்களில் எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படும். முதலில் வரும் 12 பயனாளிகளின் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பிரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story