‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 11:45 PM IST (Updated: 16 May 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீருடன் கலந்து வரும் சாக்கடைநீர் 

நெல்லை டவுன் முகம்மது அலி தெருவில் குடிநீர் குழாய்க்கு அருகில் வாறுகால் உள்ளது. இதனால் குடிநீருடன் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதற்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
- பாபு, நெல்லை டவுன். 

வாறுகால் அமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் 3-வது வார்டு தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. மேலும், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, இங்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- லிங்கதுரை, கூந்தன்குளம். 

சாலையில் ஆபத்தான பள்ளம் 

பாளையங்கோட்டை மகாராஜாநகர் 17-வது குறுக்குத்தெரு பகுதியில் பாதாள சாக்கடை அமைந்துள்ள பகுதியில் ஆபத்தான பள்ளம் உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆகையால் அந்த ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- திருக்குமரன், மகாராஜாநகர். 

சுகாதார வளாகம் தேவை

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் கிராமத்தின் வடக்குப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இங்கு காலையில் குளிக்க வரும் பொதுமக்கள், சுகாதார வளாக வசதி இல்லாததால் அந்த பகுதியில் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, சுகாதார வளாகம் அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவர்.
- மணிகண்டன், கடம்பன்குளம். 

திறந்து கிடக்கும் மின்பெட்டி 

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் உள்ள இரும்பு மின்கம்பத்தில் மின்பெட்டி மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. அந்த மின்கம்பத்தின் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக, அந்த மின்பெட்டிக்கு மூடி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- திருக்குமரன், கடையம். 

குடிநீர் வினியோகம் தொடங்கப்படுமா? 

சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிதநல்லூர் கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் சேமிப்பதற்கு தொட்டி கட்டப்பட்டு, குழாய் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால், இன்னும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படவில்லை. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வினியோகம் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர். 

நோய் பரவும் அபாயம்

தென்காசி மேலகரம் என்.ஜி.ஓ. காலனி 5-வது தெருவில் குடிநீருடன் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
- சதீஸ்குமார், மேலகரம். 

குளத்தில் புதர்கள் ஆக்கிரமிப்பு 

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் ஆலங்குளம் என்ற குளம் உள்ளது. மழைக்காலத்தில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து வெளியேறும் தண்ணீர், வரத்து கால்வாய் மூலம் இங்கு வந்து சேர்கிறது. தற்போது இந்த குளத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. மேலும் வரத்து கால்வாயிலும் புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்துக்கு தண்ணீர் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, குளம் மற்றும் வரத்து கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
- ராமன், புதுக்கோட்டை. 

ஆபத்தான கிணறுகள்

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இருந்து முடுக்குக்காடு பகுதிக்கு செல்லும் உப்பளத்து பாதையிலும், பிரதான சாலையிலும் ெமாத்தம் 3 ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளிக்கூட வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, அந்த கிணறுகளை மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 
- பலவேசமுத்து, முடுக்குக்காடு.


Next Story