ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் திருமண கோலத்தில் ஆசி பெற்ற மகன்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் திருமண கோலத்தில் ஆசி பெற்ற மகன்
x
தினத்தந்தி 16 May 2022 11:48 PM IST (Updated: 16 May 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் திருமண கோலத்தில் மகன் ஆசி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் மணிகண்டன்(வயது 28). இவர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பட்டியல் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சுஜிதாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம்(15-ந் தேதி) திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நிச்சயித்தபடி திருமணம்
திருமண விழாவில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை குணம் அடையாததால் நிச்சயித்தபடி மணிகண்டனுக்கும், சுஜிதாவுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
ஆஸ்பத்திரியில், தந்தையிடம் ஆசி
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் நேராக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை செல்வமணியிடம் சென்று மணிகண்டன் ஆசிர்வாதம் வாங்கினார். 
அப்போது மணிகண்டன் தனது தந்தையின் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களை கண்கலங்க செய்தது. 
வீடியோ வைரலாகிறது
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்ப்பவர்களும் கண்கலங்கி வருகின்றனர்.

Next Story