மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ்


மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ்
x
தினத்தந்தி 16 May 2022 11:57 PM IST (Updated: 16 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழை மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் வழங்கினார்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் தலைமை தாங்கினார். அப்போது, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 269 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்டது.
அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சாதிச் சான்றிதழ்
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் அருகே உள்ள உடையார்குளம் பகுதியில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் குடும்பத்தினர் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இதனால் இந்த சமூகத்தினரின் குழந்தைகள் கல்வி பயில்வது, அரசின் சலுகைகள் கிடைக்க பெறாமல் தவித்து வந்தனர்.
 இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்தர் விசாரணை நடத்தி அனுமதி அளித்ததன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த இந்து ஆதியன் பிரிவை சேர்ந்த 10 மாணவ-மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழை வழங்கினார்.
45 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு
இதன்மூலம், சுமார் 45 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வந்த பழங்குடியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story