பொதுப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
பொதுப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
பொதுப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் அம்மாநகரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
பின்னர் கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் நீண்ட காலமாகவே பொதுப்பாதை பிரச்சினை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
183 மனுக்கள்
அதையடுத்து சீலப்பாடி ஊராட்சி ஒன்றியம் ராயர்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த சில ஆண்டுகளாக தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது.
எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 183 மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
அதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.1000 சிறப்பு ஓய்வூதியமாக வழங்குவதற்கான ஆணை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story