மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்


மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்
x
தினத்தந்தி 17 May 2022 12:38 AM IST (Updated: 17 May 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டாச்சிமங்கலம், 

செஞ்சி அருகே இ.மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கள்ளக்குறிச்சி பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து தடம் எண்-281 என்ற அரசு பஸ்சை சென்னை நோக்கி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் அமர்ந்திருந்தனர். சிவகத்துல்லா என்பவர் கண்டக்டராக  பணியில் இருந்தார்.

தியாகதுருகத்தில் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் கன்னியப்பன் நிலை தடுமாறி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். 

பின்னர் பஸ் டிரைவர் மது போதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஒட்டிச்சென்றதாக தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து  டிரைவர் கன்னியப்பனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாற்று டிரைவர் இளையராஜா என்பவர் மூலம் அரசு பஸ் சென்னைக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. மது போதையில் அரசு பஸ்சை டிரைவர் தாறுமாறாக ஓட்டிச் சென்ற சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story