பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் வசிக்கும் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள், பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்காக சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தனர். மேலும் அப்பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் நேற்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவா் ஜல்லி சரவணன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story