கடப்பாரையால் மனைவியை குத்திக்கொன்ற விவசாயி கைது


கடப்பாரையால் மனைவியை குத்திக்கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 17 May 2022 1:04 AM IST (Updated: 17 May 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்

ஒரத்தநாடு:
திருவோணம் அருகே குடும்ப  தகராறில் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்
குடும்பத்தகராறு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள இடையாத்தி வேலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 47). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள்(40). இவர்களுக்கு பாலமுருகன், துரைமுருகன் ஆகிய 2 மகன்களும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். 
மூத்த மகன் பாலகுமாரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், மகள் கவுசல்யாவிற்கு திருமணமாகி விட்டது. இதனால் கோவிந்தராஜ், பழனியம்மாள், துரைமுருகன் ஆகிய 3 பேரும் வீட்டில் வசித்து வந்தனர்.
கடப்பாரையால் குத்தினார்
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவிந்தராஜுக்கும், பழனியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் அருகில் கிடந்த கடப்பாரை கம்பியை எடுத்து மனைவியின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பழனியம்மாள் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story