தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி விற்க அனுமதிக்க வேண்டும்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி விற்க அனுமதிக்க வேண்டும் என கைக்குழந்தைகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நரிக்குறவ பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி விற்க அனுமதிக்க வேண்டும் என கைக்குழந்தைகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நரிக்குறவ பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நரிக்குறவ பெண்கள் கோரிக்கை
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவ பெண்கள், கைக்குழந்தைகளுடன் நேற்று வந்தனர். பின்னர் இவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கடந்த 3 தலைமுறையாக நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பாசிமணி, ஊசிமணி, சோப்பு, சீப்பு, ஹேர்பின், சோப்புடப்பா போன்றவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது பழைய பஸ் நிலையம், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ளதால் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பழைய பஸ் நிலையத்தில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 26 ஏழை தொழிலாளர்களுக்கு பழைய பஸ் நிலையத்தில் பாசிமணி, ஊசிமணி போன்ற பொருட்களை விற்பனை செய்ய உதவி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த சிலர் தஞ்சை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களது ஊராட்சியில் குடிநீர் குழாய்களில் முறையாக தண்ணீர் வருவது இல்லை. 7 வருடகாலமாக அடிபம்புகள் சரி செய்யாமல் பழுதான நிலையிலேயே இருக்கிறது. கழிவுநீர் பாதை தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ், டயர் வண்டிகள் வந்து செல்ல முடியவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே நீங்கள் (கலெக்டர்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சுடுகாட்டிற்கு பாதைவசதி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்குக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் சுடுகாட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வயலில் இறங்கி சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படி வயலில் இறங்கி செல்லும்போதும் உங்களுக்கு எங்கடா பாதை உள்ளது என சிலர் சாதி பெயரை சொல்லி திட்டுகிறார்கள். எனவே இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு சுடுகாடு வரை பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story