நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 2:32 AM IST (Updated: 17 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக பாபநாசம் காரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

விக்கிரமசிங்கபுரம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக பாபநாசம் காரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காரையாறு அணை
தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணைகளில் ஒன்றாக உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை விளங்குகிறது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்து குறைவு, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் இருந்ததாலும், அணையின் நீர்மட்டம் குறைந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடைமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 686.46 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 204.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது.
நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,554.98 கன அடியாக அதிகரித்தது. இதனால் உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையாறு அணை நீர்மட்டம் சுமார் 3 அடி உயர்ந்து 49.30 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.30 அடியாக உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -9, சேர்வலாறு -7, மணிமுத்தாறு -1, கொடுமுடியாறு -7, களக்காடு -2. குண்டாறு -1, அடவிநயினார்-2, தென்காசி -5.

Next Story