புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொசு தொல்லை
மதுரை மாவட்டம் வண்டியூர் மெயின்ரோடு, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ெதாற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?.
மலர்விழி, அண்ணாநகர்.
மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் மேலச்சாலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பலர் சிறு, குறு தொழில் செய்து வருகின்றனர். இ்ங்கு வினியோகிக்கப்படும் மும்முனை மின்சாரம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனால் இப்பகுதி மக்களின் தொழில் வளங்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி தொழிலாளர்களின் நலன் கருதி தடையற்ற மும்முனை மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ்குமார், மேலச்சாலூர்.
ஆற்றில் பாலம் கட்டுவார்களா?
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் தலைமலையான் கோவில் மலையடிவார பகுதியில் பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விவசாய பொருட்களை கொண்டு செல்லும் காட்டுப்பாதை கரடு முரடாகவும் ஆற்று ஓடை உள்ளதாலும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்குள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் நகராட்சியின் சார்பாக குடிநீர் தினசரி வழங்கப்பட்டது. தற்போது இது மாற்றப்பட்டு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சேதமடைந்த சாலை
மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஜம்புரோபுரம் மார்க்கெட் முதல் உழவர் சந்தை வரை உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது.. இந்த வழியாக செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
குருமூர்த்தி, மதுரை.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூரில் பெரிய ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் குப்பைகள் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது. மேலும் கருவேல மரங்கள் ஊருணியை ஆக்கிரமித்துள்ளது. எனவே ஊருணியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?.
சரவணஆனந்த், ஆனந்தூர்.
தேங்கி கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பஸ் நிலையம் வரும் பயணிகள் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பை பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
பழனிசாமி, தாயில்பட்டி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதுடன், வாகனங்களின் மீதும் மோதுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அச்சுறுத்தும் நாய்களால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், சிவகங்கை.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் மேலூர் சாவரப்பட்டி, குன்னங்குடிபட்டி பகுதிக்கு இடைப்பட்ட நான்குவழி சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் பயணிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சரிசெய்து சீரான போக்குவரத்தினை ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், மேலூர்.
தொடர் மின்வெட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான்-வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய வேலைகள் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் தேர்வு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் கிடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
சங்கரபாண்டியன், மதுரை.
Related Tags :
Next Story