மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 17 May 2022 3:34 AM IST (Updated: 17 May 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. பின்னர் தினமும் இரவில் பாரதக் கதை பாராயணம் செய்யப்பட்டது. நேற்று காலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட புறப்பாடு நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் மற்றும் தீ மிதிக்க கங்கணம் கட்டிய பக்தர்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஊர்வலமாக கோவிலை நோக்கி வந்தனர். திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழாவை காண கூடினர். அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ மிதிக்க தயாரானவுடன், கோவில் பூசாரி அக்னி குண்டத்தை வணங்கி முதலில் தீ மிதித்தார். அதைத்தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். பின்னர் தீ மிதிக்க கங்கணம் கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அக்னி குண்டத்திற்கும், மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் மஞ்சள்நீர் விளையாட்டு நடைபெற உள்ளது.



Next Story