கல்லாற்று நீரை பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கக்கோரி விவசாயிகள் மனு
கல்லாற்று நீரை பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்:
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால் பொதுப்பணித்துறையோ பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறது. இதனால் பாசன கால்வாய்கள் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழுமையாக பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்தேக்கத்தில் தற்போது உபரி நீர் கல்லாற்றின் வழியாக வெங்கனூர் ஏரிக்கு மட்டும் செல்கிறது. விசுவக்குடி அருகே கல்லாற்றில் இருந்து நீர்பிரிந்து ஓடையாக விசுவக்குடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை சென்று, அங்கிருந்து வேத நதியாக பாலையூர், தொண்டாபாடி, நெய்குப்பை வழியாக சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது கல்லாற்று நீர் வெங்கலம் ஏரிக்கு மட்டும் செல்கிறது. கல்லாற்றின் கிளை ஓடை பொதுப்பணித்துறை பராமரிப்பு செய்யாத காரணத்தால் நீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது.
தார் சாலை அமைக்க வேண்டும்
இதனால் அந்தப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே பாரபட்சம் காட்டாமல் கல்லாற்று நீரை ஒருதலைபட்சமாக இல்லாமல் முறையாக பகிர்ந்து அளிக்க கிளை ஓடையை தூர்வாரி, அந்த ஓடையில் கல்லாற்று நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விசுவக்குடி கிராமத்தில் இருந்து சுற்றுலாத்தலமான விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே அந்த சாலையை தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசுவக்குடியில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கட்டுமானத்தில் உள்ள விரிசலை சரி செய்ய வேண்டும், என்று அதில் கூறியிருந்தனர்.