தாரமங்கலம் அருகே வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் தவறி விழுந்த முதியவர் பலி-அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்


தாரமங்கலம் அருகே வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் தவறி விழுந்த முதியவர் பலி-அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 17 May 2022 4:15 AM IST (Updated: 17 May 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் தவறி விழுந்த முதியவர் இறந்தார். இந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் தவறி விழுந்த முதியவர் இறந்தார். இந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பாப்பண்ணன் (வயது 95). இவருடைய மனைவி குஞ்சம்மாள் (85). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதால், வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதன் காரணமாக வயதான தம்பதியினர் தங்களது பழைய கான்கிரீட் வீட்டில் வசித்து வந்துள்ளனர். தாரமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தால் பாப்பண்ணன் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்று கூறப்படுகிறது.

மழைநீரில் தவறி விழுந்தார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, அவரது வீட்டுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. நள்ளிரவில் வீட்டில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த பாப்பண்ணன் கீழே இறங்கியுள்ளார். அப்போது மழைநீரில் தவறி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தவறி விழுந்து கணவர் இறந்ததை கண்டு குஞ்சம்மாள் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்கள் குஞ்சம்மாளுக்கு ஆறுதல் கூறினர். எனினும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருந்த குஞ்சம்மாள் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தாரமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மழைநீரில் தவறி விழுந்து கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story