தாரமங்கலத்தில் மரங்கள் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம்-பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தாரமங்கலத்தில் மரங்கள் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம்-பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 4:58 AM IST (Updated: 17 May 2022 4:58 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலத்தில் மரங்கள் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இதை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தாரமங்கலம் நகராட்சியின் 22-வது வார்டு அம்பேத்கர் நகரில் தென்னை மரம் முறிந்து அருகில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சின்னுசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நகராட்சியை கண்டித்தும், இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி கவுன்சிலர் சின்னுசாமி மற்றும் பொதுமக்கள் கூறும் போது, 22-வது வார்டு பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். பொதுக்கழிப்பிடத்தின் கழிவு நீர் தொட்டி சாதாரண தகரம் கொண்டு மூடப்பட்டு உள்ளதால் துர்நாற்றமும் வீசுகிறது. அதேபோல இந்த பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பழமையான தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளன. மரங்கள் தானாக முறிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்தும் முன்பே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி மின்கம்பத்தை சரி செய்தனர். 


Next Story