திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் லாரி மோதி பலி - டிரைவர் தப்பி ஓட்டம்


திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் லாரி மோதி பலி - டிரைவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 12:13 PM IST (Updated: 17 May 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,  

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஸ்ரீபெரும்புதூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்தின லாரி டிரைவர் வண்டியை சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்தவர் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Next Story