தூத்துக்குடியில் உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நடைபயிற்சி: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
தூத்துக்குடியில் உலக உயர்ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயிற்சியை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உலக உயர்ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயிற்சியை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
நடைபயிற்சி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்காவில் உலக உயர்ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயிற்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி படகு குழாம் வரை நடந்த நடைபயிற்சியில் பங்கேற்று நடந்து சென்றனர்.
பரிசோதனை
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இருதயம், சிறுநீரகம், கண்பார்வைபாதிப்பு, மூளை பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பில் முடிய வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார அளவிலான தலைமையிடங்களிலும் விழிப்புணர்வு நடைபயிற்சி நடத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிறையபேர் வீட்டில் பரிசோதனை செய்தாலும் இன்றைக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நடமாடும் மருத்துவ முகாம்கள்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 மருத்துவ பணியாளர்களை கொண்டு 752 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு நடைபயிற்சி நடத்துகிறோம். அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், பள்ளிகள், மாநகராட்சிஅலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று காலை 9 மணி முதல் 11 மணி வரை அங்கு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இன்றைக்கு ஒருநாள் மட்டும் பரிசோதனை செய்து உயர் ரத்த அழுத்தம் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களது நல்ல வாழ்க்கைக்கு உரிய மருந்துகள் வழங்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர்ரத்த அழுத்த பரிசோதனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல், சுகாதார பணிகள் இணை இயக்குனர்கள் பொற்செல்வன், போஸ்கோராஜா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் குமரன், மாநகர் நல அலுவலர் அருண்குமார், தொற்றாநோய் ஒருங்கிணைப்பாளர் சுருதி, இந்திய மருத்துவ கூட்டமைப்பு சிவசைலம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ம.செந்தில்குமார், மாநகர உதவி செயற்பொறியாளர் சரவணன், தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story