எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்


எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2022 8:28 PM IST (Updated: 17 May 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

“எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

குன்னூர்

“எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

ராணுவ பயிற்சி கல்லூரியில் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோவை வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் ஊட்டி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வெங்கையா நாயுடு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். 
இந்த நிலையில் சாலை மார்க்கமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார்.
அங்கு அவருக்கு ராணுவ பயிற்சி கமாண்டன்ட் மோகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நினைவு சின்னங்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

வரலாறு புகழ்

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி  275 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று புகழ்பெற்றது. இங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் இந்திய ராணுவத்திற்கு பலவிதமான பயிற்சி அளிக்கிறது.
ராணுவத்தில் அதன் இணையற்ற பங்கும், அது பெற்றுள்ள எண்ணற்ற விருதுகளுமே இதன்புகழை பறைசாற்றும். புதிய தேசத்தை உருவாக்குவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

இன்று, இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி-அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது என்பது உங்களுக்கு தெரியும். வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். எனவே, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் உறுதியாக முறியடிக்கவும் நமது படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
நமது அணுகுமுறை எப்போதும் அமைதியான மற்றும் பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்பு படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது.

புதிய போர்முறை

போார்கள் இன்றைய காலத்தில் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக தகவல் மற்றும் இணைய போர், டிரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நமது பாதுகாப்பு துறை புதிய மற்றும் வளர்ந்து வரும் போர் முறைகளில் கவனம் செலுத்தி தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை 'எதிர்கால சக்தியாக' வளர்ப்பதே நமது எண்ணமாகவும் திட்டமாகவும் இருக்க வேண்டும்.
நாம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது, தனித்து செயல்படும் முறையிலிருந்து ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் ‘ஆத்மநிர்பர்தா’ ஆகியவற்றை ஊக்குவிக்க அரசாங்கம் பல கொள்கை முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

புதிய சிக்கல்கள்

புவிசார் மற்றும் அரசியல் நிர்பந்தங்கள், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பாதுகாப்பு சூழலின் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. எனவே, பிரச்சினைகளை ஆழமாக புரிந்துகொள்வது அவசியம். நமது தேசிய நலன்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். காலப்போக்கில், பாதுகாப்பு துறையில் மாற்றம் என்பது யதார்த்தமான ஒன்றாகும். இந்த சவால்களை சமாளிப்பதற்கு, நாம் தொடர்ந்து நமது தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும்.
கொரோனா காலங்களிலும், இந்த மையம் வெற்றிகரமாக பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்தது என்பதை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வீராங்கனைகள்

ராணுவ சீருடையில் உள்ள ஆண்களும், பெண்களும் எப்போதும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். நமது துணிச்சலான வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். நமது இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியையும், நமது ராணுவத்தின் மீதான மரியாதையையும் ஊட்டுவதற்கு ராணுவ நினைவு சின்னங்கள் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
இந்திய வரலாறு வீராங்கனைகளின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ராணி துர்காவதி, ராணி அப்பாக்கா, ருத்ரமா தேவி, ராணி வேலு நாச்சியார், லட்சுமிபாய் உள்ளிட்டோர் தங்கள் எதிரிகளிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்ற சிறந்த வீராங்கனைகள். சேவைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பெண்களுக்கு சமவாய்ப்பு

விமான படையின் போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், ராணுவ காவல் படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இவை வரவேற்கத்தக்கவை. ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
நமது ஆயுத படைகளின் எதிர்கால தலைமை மற்றும் வீரர்களை வடிவமைப்பதில் இங்குள்ள டிபன்ஸ் சர்வீசஸ் கல்லூரி, மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் அதன் ஆசிரியர்களின் முயற்சிகளும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
துணை ஜனாதிபதியுடன் அவருடைய மனைவி உஷாவும் வருகை தந்து இருந்தார்.

52 ஆண்டுகளுக்கு பின்னர்...

52 ஆண்டுகளுக்கு பின்னர் துணை ஜனாதிபதி ஒருவர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். கடைசியாக கடந்த 1970-ம் ஆண்டு துணை ஜனாதிபதி கோபால் சுவரூப் பதக் இங்குவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (புதன்கிழமை) ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மீண்டும் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வெடுக்கின்றார். பின்னர் 20-ந் தேதி வெங்கையா நாயுடு கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோத்தகிரி, குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story