கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர் மழை: தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வீடு சேதம்


கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர் மழை: தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வீடு சேதம்
x
தினத்தந்தி 17 May 2022 8:28 PM IST (Updated: 17 May 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடு சேதம்

கூடலூர்

கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடு சேதம் ஆனது. 

மண் சரிவு- அபாயம்

கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோடை கால பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-ம் வார்டு தட்டக்கொல்லி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். தொடர் பலத்த மழையால் அப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முத்து, வரதராஜ், ராமலிங்கம், நாடிமுத்து, ராமஜெயம், சீதாலட்சுமி ஆகியோரது வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடியும் அபாயத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

தடுப்பு சுவர்கள் கட்ட கோரிக்கை

இதனால் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் உடனடியாக தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தொடர் மழையால் குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்பதால் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும். இல்லையெனில் வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பந்தலூரில் வீடு சேதம்

பந்தலூர் தாலுக்கா கொளப்பள்ளி பாடசாலை செல்லும் சாலைக்கும் கீழ் பகுதியில் குடியிருப்பவர் மோகனா மனோகர். தொடர் மழை காரணமாக அவரின் வீட்டு அருகில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீடு ேசதமடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் தாசில்தார் நடேஷன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீட்டின் உரிமையாளர், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கடும் குளிர் வீசுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Next Story