கடலூரில் கடல் சீற்றம் மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
கடலூரில் கடல் சீற்றம் காரணமாக, மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூா்,
வங்கக்கடலில் அசானி புயல் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் எதிரொலியாக கடலூரில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
நேற்று, சீற்றம் மேலும் அதிகரித்தது. அலைகள் கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்து மோதியது.
இதில், சுப உப்பலவாடி பகுதியில் வனத்துறை சார்பில் கடல் நீர் ஊருக்குள் புகாத வகையில் வைக்கப்பட்டிருந்த சவுக்கு மர தோப்புக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் சில சவுக்கு மரங்கள் சாய்ந்து விழுந்து, அலையில் அடித்து செல்லப்பட்டது.
மேலும், சுப உப்பலவாடி, நாணமேடு பகுதியில் தென்பெண்ணையாற்றின் முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகுந்து, ஆற்றுப்பகுதியும் கடலும் இணைந்து காணப்படுகிறது. இதனால், முகத்துவாரம் பகுதி குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது.
கடல் சீற்றம் மேலும் தொடர்ந்தால், முகத்துவாரம் பகுதியில் இருக்கும் சுப உப்பலவாடி, தாழங்குடா, நாணமேடு உள்ளிட்ட மீனவ கிராமத்திற்குள் தண்ணீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூண்டில் வளைவு
அதோடு அந்த பகுதியில் விவசாய நிலமும் பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. வரும் நாட்களில் இதுபோன்ற நிலையை தடுக்க, சுப உப்பலவாடி பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவனாம்பட்டினம்
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் எழுந்த ராட்சத அலைகள் கடற்கரையில் இருந்து சுமார் 30 அடி தூரத்திற்கு வெளியே வந்தது.
இதன் காரணமாக கடற்கரை மணற்பரப்பு முழுவதும் நேற்று குளம்போல் காணப்பட்டது. மேலும் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டதால் தேவனாம்பட்டினத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சவுக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் உப்பனாறு தண்ணீர் முகத்துவாரம் வழியாக கடல் உள்வாங்காததால், ஆற்றின் கரையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் கடலூர் தேவனாம்பட்டினம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து ஆற்று தண்ணீரை கடல் உள்வாங்காததால், தண்ணீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பனாறு கரையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story