அதிவேகமாக இயக்கிய லாரிகளை சிறைபிடித்து போராட்டம்


அதிவேகமாக இயக்கிய லாரிகளை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 9:48 PM IST (Updated: 17 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே கற்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக இயக்கிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கற்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக இயக்கிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல் குவாரிகள்

கிணத்துக்கடவு சுற்றுப்புற பகுதிகளில் கல் குவாரிகள் அதிகமாக உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து கற்கள் லாரிகளில்  ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேவராயபுரம், நெம்பர் 10 முத்தூர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி செல்லும் லாரிகள் தேவராயபுரம் வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றன. இப்பகுதியில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி வரும் லாரிகள் தாறுமாறாக இயக்கப்படுகிறது.  

இதனால் தேவராயபுரம் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். இருப்பினும் லாரி டிரைவர்கள் சாலையில் செல்லும் போது லாரியை அதிவேகமாக ஓட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. அதிக பாரம் ஏற்றி சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக கற்கள் ஏற்றி வந்த லாரிகளை தேவராயபுரம் பொதுமக்கள் சிறைப்பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீசார் பேச்சுவார்த்தை 

அப்போது பொதுமக்கள் லாரி டிரைவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார் சென்று லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.லாரிகள் அதிவேகமாக செல்லாது மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கல் குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி  கேரளாவுக்கு செல்லும் லாரிகளை அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது. இதனால் தேவராயபுரம் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிணத்துக்கடவு தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் லாரிகளை வேகமாக இயக்கக்கூடாது என வலியுறுத்தி லாரிகளை சிறைப்பிடித்தோம். இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story