அரசு பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி
ரங்கே கவுண்டன்புதூருக்கு இரவு நேர அரசு பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு
ரங்கே கவுண்டன்புதூருக்கு இரவு நேர அரசு பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு பஸ்
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கோவை, பொள்ளாச்சிக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்காக அரசு பஸ்சில் சென்று வருகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு அருகே ரங்கே கவுண்டன்புதூருக்கு 43 எண் நகர பஸ் இயக்கப்படுகிறது. கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும். இந்த பஸ் சிங்கையன் புதூர், மூலக்கடை, முத்துக்கவுண்டனூர், பாலார்பதி வழியாக ரங்கே கவுண்டன்புதூரை 9.10 மணிக்கு வந்தடைகிறது.
அங்கு இரவில் நிறுத்தப்படும் பஸ் அதிகாலை 5.40 மணிக்கு கிணத்துக்கடவுக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த பஸ்சில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று வந்தனர். கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவில் இருந்து இரவில் ரங்கே கவுண்டன்புதூர் கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட வில்லை. மாறாக பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்டது. இதனால் பணிக்கு சென்று வருபவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர்.
பயணிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து ரங்கே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பயணிகள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தொடர்ந்து போலீசார் போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேசியும், பஸ் இயக்கப்படாததால் பயணிகள் இரவில் பாதிக்கப்பட்டனர். மேலும் வாடகைக்கு ஆட்டோ பிடித்து தங்களது ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 16-ந் தேதி "தினத்தந்தி" நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக பொள்ளாச்சி போக்குவரத்து துறை அதிகாரிகள் கிணத்துக்கடவில் இருந்து ரங்கே கவுண்டன்புதூருக்கு இரவு நேர பஸ்சை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு ரங்கே கவுண்டன்புதூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் ரங்கே கவுண்டன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பஸ்சை இயக்க செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story