பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை: கர்நாடகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்


பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை: கர்நாடகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
x
தினத்தந்தி 17 May 2022 10:01 PM IST (Updated: 17 May 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


பெங்களூரு:

சீதோஷ்ண நிலை

  கர்நாடகத்தில் மே மாத தொடக்கத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்தது. மாநிலத்தின் கலபுரகி, பீதர் உள்ளிட்ட வட கர்நாடக பகுதிகளில் அனல் காற்று வீசியது. எப்போதும் மென்மையான சீதோஷ்ண நிலை நிலவும் தலைநகர் பெங்களூருவிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. 

ஆனால் ஒரு வாரம் இந்த வெயில் வாட்டி வதைத்த நிலையில் தினமும் மாலையில் கோடை மழை பெய்து நகரை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளையும் குளிர்வித்தது.
  அதைத்தொடர்ந்து அசானி புயல் தாக்கியதை அடுத்து, கர்நாடகம் வெப்பம் முழுவதுமாக நீங்கி குளிர் காற்று வீசியது. 2, 3 நாட்கள் இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலும் மழை பெய்தது. இதனால் கோடையின் உக்கிரத்தில் இருந்து கர்நாடக மக்கள் தப்பித்தனர். அசானி புயலுக்கு பிறகு கர்நாடகத்தில் வெயிலின் தாக்கம் பழைய நிலையை அடையவில்லை. தொடர்ந்து பகலில் லேசான வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக உள்ளது.

வெள்ளம் வழிந்தோடியது

  கோடையின் உக்கிரம் அதிகமாக இருக்கும் இந்த மே மாதத்தில் வெப்பம் முழுவதுமாக நீங்கி மழை பெய்வது மற்றும் குளிர் காற்று வீசுவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் நேற்றும் பகலிலேயே மழை பெய்தது. லேசாக பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
 சூரியன் முழுவதுமாக மறைந்து மேக மூட்டம் காணப்பட்டது.
  இதற்கு முன்பு இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் கோடை மழை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த மழை இன்று (புதன்கிழமை) முதல் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று கடலோர மாவட்டங்கள், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, குடகு, மண்டியா, மைசூரு மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஆங்காங்கே குழிகள்

  பெங்களூரு நகர், பல்லாரி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராமநகர், துமகூரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னல் இருக்கும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், இந்த ஆண்டு நீர் பிரச்சினை இருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  இந்த மழை காரணமாக பெங்களூருவில் சாலைகளில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்து 228 குழிகள் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் 200 குழிகள் ஆபத்தை விளைவிக்கும் குழிகளாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மழை நின்றதும் குழிகள் மூடப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தற்போதைக்கு நிற்காது என்பதால் குழிகள் மூடப்படுவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

153 ஆடுகள் இறந்தன

  பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, சித்ரதுர்கா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு பகுதியில் மின்னல் தாக்கி 153 ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு ஆகியவை இறந்துவிட்டன. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சாம்ராஜ்நகர், குடகு, தார்வார், பெலகாவி, பீதர், கலபுரகி, யாதகிரியில் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


Next Story