எர்த்தாங்கல் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


எர்த்தாங்கல் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2022 10:10 PM IST (Updated: 17 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

எர்த்தாங்கல் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

குடியாத்தம்

எர்த்தாங்கல் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். 

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எர்த்தாங்கல் கெங்கையம்மன் கோவில் அருகே செல்லும் மோர்தானா கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து ஏரியான்பட்டி பகுதியில் பாரதப்பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.  அப்போது அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து பேசினார். தொடர்ந்து அந்த குழந்தைகளுக்கு தர்பூசணி பழம் வரவைத்து வழங்கினார். 

மகளிர் திட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.

கைத்தெளிப்பான்

 இந்த திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பு, சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும் தரிசுநில தொகுப்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விவசாயிகளுக்கு மானிய விலையில் கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் மற்றும் மணிலா விதைகளை வழங்கினார்.

ஆய்வின்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, உதவி திட்ட இயக்குனர் வசுமதி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்றத்தலைவர் அம்முநெடுஞ்செழியன், வேளாண்மை துறை துணை இயக்குனர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் உமாசங்கர், வேளாண்மை அலுவலர் அன்பழகன் மற்றும் பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story