அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
கடலூர், விருத்தாசலத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், ஆதவன், சிவப்பிரகாசம், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலு.பச்சையப்பன் வரவேற்றார். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மருதவாணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகள்
போராட்டமானது, கொரோனா சிகிச்சை கட்டணம் உள்ளிட்ட மருத்துவ செலவை திரும்பப்பெற நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தொகை வழங்க வேண்டும். 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்கிட வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியின்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட செயலாளர் பழனி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாநில செயலாளர் மனோகரன் நிறைவுரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரராஜன், அரங்க.ராமானுஜம், ஞானமணி, கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.
விருத்தாசலம்
இதேபோல் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கண்ணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசு, சீனிவாசன், முத்துகிருஷ்ணன், ஆதிமூலம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.விழுப்புரம் மண்டல தலைவர் பழமலை, கடலூர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், பகுதி குழு செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.இதில் மாநில துணை தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.