தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 May 2022 5:07 PM GMT (Updated: 17 May 2022 5:07 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, சுனையக்காடு ஊராச்சி ஆண்டவராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மெய்யநாதன், ஆண்டவராயசமுத்திரம், புதுக்கோட்டை. 
உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா? 
அரியலூர் மாவட்டம், கூவத்தூர் மற்றும் அதனை சுற்றி ஏராளமான மாணவ- மாணவிகள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூவத்தூரில் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் உயர்நிலைப் பள்ளி வரை கூவத்தூரில் படித்துவிட்டு, மேல்நிலைப்பள்ளியில் படிக்க அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூவத்தூர் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அருமைநாதன், கூவத்தூர், அரியலூர்.
நிறுத்தப்பட்ட அரசு பஸ்சால் மக்கள் அவதி 
அரியலூரிலிருந்து தஞ்சாவூர் வரை அதாவது வி.கைகாட்டி மற்றும் முனியங்குறிச்சி,  பெரியதிருக்கோணம், சுண்டகுடி, ஏலாக்குறிச்சி, திருமானூர் வழியாக அரசு பஸ் ஒன்று காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டிற்கு முன்பே மேற்படி வழித்தடத்தில் அரசு பஸ் இயங்காமல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் . எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முனியங்குறிச்சி, அரியலூர். 



Next Story