மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 17 May 2022 10:43 PM IST (Updated: 17 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர்
கூட்டு பாலியல் பலாத்காரம் 
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி அணைக்கரைபட்டியை சேர்ந்த கணேசன்(வயது 28) மற்றும் முனியப்பன் (23) ஆகிய 2 பேரும் மேட்டூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் சமையல் செய்வதற்காக விறகு பொறுக்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணை அவர்கள் 2 பேரும் அழைத்து மோட்டார் சைக்கிளில் அமரவைத்துக்கொண்டு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டில் வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனையும், முனியப்பனையும் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது. 
20 ஆண்டுகள் சிறை தண்டனை
வழக்கை விசாரித்த கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இதற்கான தீர்ப்பினை நேற்று கூறினார். அதில் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்ததுடன், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அதனால் இருவரும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 
மேலும் மனநலம் சரியில்லாத பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டார். இதனால் நேற்று கரூர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story