அரசு பஸ் டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
மணல்மேடு
மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லி நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை குமரேசன் (வயது 42) ஓட்டினார். கண்டக்டராக பூவராகவன் (58) பணியில் இருந்தார். அந்த பஸ் சித்தமல்லி சென்று விட்டு திரும்பி விராலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது வாலிபர்கள் சிலர் சாலையின் குறுக்கே தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தனர். உடனே, பஸ்சை நிறுத்திய டிரைவர் குமரேசன், கீழே இறங்கிச் சென்று அந்த வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தும்படி கூறினார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் டிரைவரிடம் தகராறு செய்ததுடன் அவரது செல்போனை பிடுங்கி சாலையில் வீசி எறிந்துள்ளனர். மேலும், குமரேசனை சராமாரியாக தாக்கினர். பஸ்சின் கண்ணாடியை உடைத்தும் ரகளை செய்தனர். வாலிபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த குமரேசனை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கண்டக்டர் பூவராகவன் மணல்மேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பட்டவர்த்தியை சேர்ந்த விமல்ராஜ், சரண்ராஜ், இளந்தமிழ், ரகு, பிரண்ட்ராஜ், சத்தியசீலன் ஆகிய 6 பேர் மீது மணல்மேடு போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story