மழை காலங்களில் குளமாக மாறும் நாகை புதிய பஸ் நிலையம்


மழை காலங்களில் குளமாக மாறும் நாகை புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 17 May 2022 11:38 PM IST (Updated: 17 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

நாகை புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளாவது நிறைவேற்றி தரப்படுமா? என நாகை நகர மக்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதனால் மும்மதத்தினரும் நாகை மாவட்டத்திற்கு வழிபாட்டுக்காகவும், ஆன்மிக சுற்றுலாவாகவும் வந்து செல்கின்றனர். 
இது தவிர இந்த மாவட்டத்தில் கோடியக்கரை பறவைகள் சரணாலயம், வேளாங்கண்ணி கடற்கரை ஆகியவை இருப்பதால் நாகை மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
புதிய பஸ் நிலையம்
இவ்வாறு வந்து செல்லும் ஆன்மிகவாதிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ரெயில் போக்குவரத்தை போன்று பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக நாகையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக நாகை நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அடிப்படை வசதிகள்
இப்படி தினமும் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய நாகை புதிய பஸ் நிலையத்தின் நிலையோ மிக மோசமாக உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பஸ் நிலையத்திற்கான எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை என்றே சொல்லலாம்.
பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. கூடுதல் இருக்கைகள் அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
பூட்டி கிடக்கும் கழிவறை
பஸ் நிலைய வளாகத்தில் கட்டண கழிவறைகள் உள்ளன. இந்த கட்டண கழிவறைகளை மட்டுமே தற்போது பயணிகள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர். அரசு விரைவு பஸ்கள் நிற்கக்கூடிய இடத்தின் அருகே ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டி கிடக்கிறது. இந்த கழிவறையை பயன்பாட்டிற்கு  கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் மிக விரைவில் பயன்பாட்டிற்கு இந்த கழிவறையை கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 
துர்நாற்றம் வீசுகிறது
பஸ் நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பகுதியில் பயணிகள் ஓரமாக நின்று சிறுநீர் கழிப்பதால் பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அவல நிலையை கண்டு முகம் சுளிக்கின்றனர்.
இந்த துர்நாற்றத்திற்கு மத்தியில் பஸ் நிலையத்தில் உள்ள உணவகங்களில் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எப்போது நாகையை விட்டுப் புறப்படுவோம்... என்கிற மன நிலையில் பஸ்சுக்குள் அமர்ந்திருக்கும் பயணிகள் மூக்கைப்பிடித்துக்கொண்டு முணுமுணுப்பதை நாள்தோறும் பார்க்க முடிகிறது.
மழைக்காலங்களில் குளமாக மாறி விடும் 
நாகையில் மழை பெய்தால் போதும் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் படும் அவதி கொஞ்ச நஞ்சம் அல்ல. தேங்கி நிற்கும் மழை நீரில் பஸ்கள் நீந்தியபடியே சென்று வரும்.. 
மேலும் பஸ் நிலையத்தின் உள்ளே உள்ள சாலை பள்ளம், படுகுழிகளாக காட்சி அளிப்பதால் மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் நடந்து செல்வதற்குள் பயணிகள் ஒரு வழி ஆகிவிடுகின்றனர். பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. 
பாதியில் நிற்கும் காம்பவுண்டு சுவர்
பஸ் நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டிட பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இந்த பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்
நாகை புதிய பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இது பயணிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த பாதுகாப்பாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. புறக்காவல் நிலையம் என எழுதப்பட்ட வாசகங்கள் அழிக்கப்பட்டு, அங்கு புறக்காவல் நிலையம் இருக்குமிடமே தெரியாமல் உள்ளது. இதனால் நாகை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. 
அடிப்படை வசதிகள்
மர்ம நபர்கள் மது குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் அடாவடியில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிக்காக வரும் பெண்கள் இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பஸ் ஏறி செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
எனவே நாகை புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றி கொடுக்க முன்வர வேண்டும் என்று பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story