மூக்கையூரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு:கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மூக்கையூரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதாகி உள்ள 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
மூக்கையூரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதாகி உள்ள 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பாலியல் ெதால்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி விரைவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 4 பாலியல் குற்ற வழக்குகளில் 5 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பரமக்குடி அருகில் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவி என்கிற ரவீந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரவி என்ற ரவீந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருச்சுழி நத்தகுளம் சுப்பையா மகன் தினேஷ்குமார், கமுதி பசும்பொன் கிழக்குத்தெரு தர்மலிங்கம் மகன் அஜித்குமார், கமுதி வேப்பங்குளம் முத்து அரியப்பதேவர் மகன் பத்ம ஈஸ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்படி 3 பேரையும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
60 நாட்களுக்குள்...
தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயலோ இக்னேஷியஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தாக்கலாகும் வழக்குகள் மீது 60 நாட்களுக்குள் விசாரணை முடித்து குற்றபத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி காவல்துறையில் புகார் அளிக்க முன்வரவேண்டும் எனவும், அவர்கள் பற்றிய விபரங்கள், ரகசியம் காக்கப்படும் எனவும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story