குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 18 May 2022 12:01 AM IST (Updated: 18 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமையன்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் நிர்வாக வேலை காரணமாக விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 3-வது வார செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

வழக்கமாக கூட்டத்தில் திருவண்ணாமலை உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் வெளியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து அலுவலர்களை சிறைபிடித்து கோஷங்கள் எழுப்பினர். 

இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் முருகானந்தம் தலைமையில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) தே.குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் கரும்பு வரத்து முடியும்வரை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கீழ்க்கொடுங்காலூர் காவேட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.55 முறைகேடாக வாங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆரணி

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேளாண் விரிவாக்க உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆரணி தாசில்தார் பெருமாள் தலைமையில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் திருமலை வரவேற்றார். 

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருவதால் சரிவர விவசாயம் செய்ய முடியவில்லை, மின் நிறுத்தம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா முகாம்கள் நடத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாக்கள் மாற்றம் செய்வதில் தாமதம் இருந்து வருகிறது. அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Next Story