திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன்கள் திருட்டு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டன.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மேற்பார்வையில் திருட்டு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர்.
ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
அவர்களின் தீவிர முயற்சியின் அடிப்படையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் மீட்கப்பட்டன. இந்த செல்போன்கள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை வழங்கினார்.
அப்போது அவர், உரிய புகார் மனுதாரர்களிடம் செல்போனை வழங்கியும், செல்போனை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும் மற்றும் தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்.
துண்டு பிரசுரம் வினியோகம்
மேலும், பண இழப்பு ஏற்படும் சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மற்ற சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க வேண்டிய www.cybercrime.gov.in என்ற இணையதளம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் கலந்து கொண்டனர். இதில் செல்போனை பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சைபர் கிரைம் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story