கொடைரோடு அருகே இருதரப்பினர் மோதல்; பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு அரிவாள வெட்டு


கொடைரோடு அருகே இருதரப்பினர் மோதல்; பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு அரிவாள வெட்டு
x
தினத்தந்தி 18 May 2022 12:51 AM IST (Updated: 18 May 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைரோடு:
கொடைரோடு அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
 மீன் விற்பனையில் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் சத்திரியன் (வயது 20), ஆதித்யா (19). இவர்கள் சரக்கு வேனில் ஊர், ஊராக சென்று மீன் விற்று வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் இவர்கள், கொடைரோடு அருகே கந்தப்பக்கோட்டை பகுதியில் சரக்குவேனை நிறுத்தி மீன் விற்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (24), மதன் (25) ஆகியோர் வேனை ஓரமாக நிறுத்தும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்தநிலையில் கந்தப்பக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலர், பள்ளப்பட்டியில் உள்ள சத்திரியனின் சரக்குவேனை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சத்திரியன் தரப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள், ஆட்டோவில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் இரவு கந்தப்பக்கோட்டைக்கு சென்றனர்.
பின்னர் திடீரென சாலையில் பெட்ரோல்குண்டை வீசினர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதைத்தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் (21), முத்துக்குமார் (22) மற்றும் சுரேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.
இதைத்தொடர்ந்து சாலையோரம் நிறுத்தியிருந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர். மேலும் வீடுகளின் கதவுகள், ஓடுகளை கல்வீசி தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
போலீசார் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் காயமடைந்த விக்னேஷ், முத்துக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சுரேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையே திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் சூப்பிரண்டுகள் லாவண்யா, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் எதிரொலியாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கந்தப்பக்கோட்டை பகுதியில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
9 பேர் கைது
பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக பள்ளப்பட்டியை சேர்ந்த பிரவீன்ராஜா (26), அருண்பாண்டி (26), தீபக்குமார் (23), கனிராஜா (25), செந்தில்ராஜன் (31), சிவா (35), சிவபாண்டி (27), நிலக்கோட்டையை சேர்ந்த நவீன் (27) மற்றும் 18 வயதுடைய வாலிபர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆதித்யா, சத்திரியன் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story