ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணத்தில் பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
Published on

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

கோஷம் எழுப்பினர்

முற்றுகை போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 76 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணி

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்பகோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கழக அலுவலகம் பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் சுமார் 7 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓய்வூதியர்களின் முற்றுகைப் போராட்டத்தையொட்டி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார் அழகேசன் பேபி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com