தி.மு.க. வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வேட்புமனு தாக்கல்


தி.மு.க. வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:20 AM IST (Updated: 26 March 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்தநிலையில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆல்பி ஜான்வர்க்கீசிடம் நேற்று காலை 11 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மாற்று வேட்பாளராக அவருடைய கணவர் சந்திரசேகர் பெயரில் வேட்புமனு அளிக்கப்பட்டது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், அரவிந்த் ரமேஷ் மற்றும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தென்சென்னை தொகுதியில் அ.தி.மு.க. எம்.பி. செய்ய தவறிய திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகள் சேகரிப்பேன். நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என்றார்.

வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி ஜெயந்தி பெயரில் வேட்புமனு அளிக்கப்பட்டது.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சாமி, தாயகம் கவி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக டாக்டர் கலாநிதி, கருணாநிதி சமாதியில் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கலாநிதி வீராசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘அ.தி.மு.க. மீதும், பா.ஜ.க. மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வடசென்னையில் நான் வெற்றி பெறும் பட்சத்தில் குப்பை, குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை’ என்றார்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்புமனு அளிக்கிறார்.

Next Story