மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - தேர்தல் பிரசாரத்தில் ராகுல் வாக்குறுதி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - தேர்தல் பிரசாரத்தில் ராகுல் வாக்குறுதி
x
தினத்தந்தி 1 April 2019 4:45 AM IST (Updated: 1 April 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

விஜயவாடா,

அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் களம் களை கட்டி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நேற்று அங்குள்ள விஜயவாடாவில் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி ஏழைகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்துகிறார். காங்கிரஸ் கட்சியோ வறுமை மீது துல்லியமான தாக்குதல் நடத்தும். மோடி 2 இந்தியாக்களை உருவாக்குகிறார். ஒரு இந்தியா அனில் அம்பானி, மெகுல் சோக்சி போன்ற பணக்காரர்களுக்கானது. இன்னொரு இந்தியா, ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள், வேலை இல்லாத இளைஞர்களுக்கானது.

ஆனால் எங்கள் எண்ணம் எல்லாம் ஒன்றுபட்ட ஒரே இந்தியா; அதில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். எனவேதான் இப்போது வறுமை மீது துல்லியமான தாக்குதல் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.

இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் (என்.ஒய்.ஏ.ஒய்.) குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை செயல்படுத்துவோம். இது வறுமைக்கு எதிரான அஹிம்சை ஆயுதம் ஆகும். மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் 5 கோடி குடும்பங்களும், 25 கோடி தனிநபர்களும் பலன் அடைவார்கள்.

ஆதார் அடையாள அட்டை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் இந்த திட்டத்தின்கீழ் பலன் அடைய வேண்டியவர்களை அடையாளம் கண்டறிவோம்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக தந்து நிறைவேற்றிக் காட்டியதுபோல இந்த திட்டத்தையும் நிறைவேற்றிக் காட்டுவோம். நான் மோடி அல்ல, பொய் சொல்லமாட்டேன். அவர் ஏழை மக்களுக்கு பணம் தருவதாக சொல்லி விட்டு நாட்டின் பெரும் பணக்காரர்களுக்குத்தான் கொடுத்தார்.

அவர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் தூண்களை அழித்தார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற உறுதியை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அளித்தார். அது தனிநபர் அளித்த வாக்குறுதி அல்ல. இந்திய நாட்டின் பிரதமராக இருந்தவர், இந்தியாவின் சார்பில் அளித்த வாக்குறுதி அது. கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆந்திராவுக்கு அதற்கான தகுதி இருந்தும் சிறப்பு அந்தஸ்து தராதபோது, அதை இங்குள்ள கட்சிகள் கடுமையாக எதிர்க்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்யாண் துர்க் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், “வட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில், ஆட்சிக்கு வந்தால் 10 நாளில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனறு வாக்குறுதி அளித்தோம். ஆனால் இரண்டே நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம் என்பதை பெருமிதத்துடன் கூறுகிறேன். அதே வாக்குறுதியை ஆந்திராவுக்கும் தருகிறேன். நீங்கள் (மத்தியிலும், மாநிலத்திலும்) காங்கிரஸ் அரசு அமைய வாக்களித்தால் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வோம்” என குறிப்பிட்டார்.

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக ராகுல் காந்தி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

“கடந்த தேர்தலின்போது ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், 100 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் கட்டமைக்கப்படும், வெளிநாடுகளில் இருந்து ரூ.80 லட்சம் கோடி கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்றெல்லாம் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் நிறைவேற்ற வில்லை” என்று குறிப்பிட்டார்.

1 More update

Next Story