அமேதியை தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டி - காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு


அமேதியை தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டி - காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2019 12:15 AM GMT (Updated: 31 March 2019 10:36 PM GMT)

உத்தரபிரதேச மாநிலம் அமேதியை தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதை அக்கட்சி மேலிடம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதுடெல்லி,

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின், அக்கட்சி முதன் முதலாக நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பு 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர் அந்த தொகுதியில் இருந்துதான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டர். எனவே இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

என்றாலும் தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதுபற்றி கட்சி முடிவு எடுக்கும் என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.

இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி நேற்று டெல்லியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவது குறித்து ஏ.கே.அந்தோணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அமேதி தொகுதியுடன், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டார். வயநாடு, கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களால் சூழப்பட்டு உள்ளது.

ஆகவே, அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது 3 தென் மாநிலங்களையும் திருப்திப்படுத்துவதாக அமையும். 3 தென் மாநிலங்களும் சந்திக்கும் இடத்தில் இருப்பதும், வயநாடு தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.

இதுபோல், காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

அமேதி, ராகுல் காந்தியின் கர்ம பூமி. எனவே, அங்கிருந்து அவர் செல்ல மாட்டார். ராகுல் தங்கள் தொகுதியில் இருப்பதால்தான், தாங்கள் பாதுகாக்கப்படுவதாக அமேதி மக்கள் நம்புகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ்காரர்கள், தங்கள் மாநிலத்திலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மோடி அரசால், தங்களது மொழி மற்றும் கலாசாரம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

மொழி, கலாசாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை தாக்கும் சக்திகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கும், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் பிணைப்பை உண்டாக்குவதற்கும் நடக்கும் போராட்டம்.

பா.ஜனதா, அழிக்க முயற்சிக்கிறது. நாங்கள் ஆக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து தென் மாநிலங்களில் போட்டியிடும் மூன்றாவது தலைவர் ராகுல் காந்தி ஆவார்.

ராகுல் காந்தியின் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 1978-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1980-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த போது 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

தனது பாட்டி, தாயார் ஆகியோரை தொடர்ந்து ராகுல் காந்தி இப்போது கேரளாவில் போட்டியிட இருக்கிறார்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வயநாடு தொகுதி கடந்த 2009-ம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்று விளங்கும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று. கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருப்பதால் கேரள மாநில காங்கிரசார் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்து உள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதும் கேரளாவில் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


Next Story