இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் -மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 7:35 AM GMT (Updated: 1 April 2019 9:32 AM GMT)

இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

அரக்கோணம் சோளிங்கரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.

பேருந்துகளுக்கு தீ வைப்பு, பாலங்களை தகர்த்தது என ராமதாஸின் பாமக மீது ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருந்தார். பாமகவை குற்றஞ்சாட்டி ஜெயலலலிதா பேசியது சட்டசபை அவைக்குறிப்பில் உள்ளது. பாமகவை வன்முறைக்கட்சி என சட்டசபையில் கூறியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதிமுக அரசின் முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தவர் அன்புமணி. முட்டை கொள்முதல், ஆவின் ஒப்பந்தங்கள், கல்வித்துறை நியமனம் என 18 ஊழல்களை முன்வைத்தவர் அன்புமணி.

வன்னியர்களின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

எதிர்க்கட்சிகளை மிரட்டவே வருமான வரித்துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். திமுகவின் பிரசார பணிகளை தடுக்கவே துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story