முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ், யோகி ஆதித்யநாத் டுவிட்டால் சர்ச்சை


முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ், யோகி ஆதித்யநாத் டுவிட்டால் சர்ச்சை
x
தினத்தந்தி 5 April 2019 12:22 PM GMT (Updated: 5 April 2019 12:39 PM GMT)

முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்ற யோகி ஆதித்யநாத் டுவிட்டால் சர்ச்சை நேரிட்டுள்ளது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தில் வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, காங்கிரசின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பெருமளவு தொண்டர்கள் கட்சியின் பச்சைக் கொடியுடன் வரவேற்றனர். இதனை சாடிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம் லீக் நாட்டிற்கே பாதிப்பை உண்டாக்கும் வைரஸ் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், முஸ்லீம் லீக் ஒரு வைரஸ். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசை அந்த வைரஸ் தாக்கியுள்ளது.  இப்போது அக்கட்சி தேர்தலில் வென்றால் என ஆகும்? நாடு முழுவதும் அந்த வைரஸ் பரவும். 1857-ல் சுதந்திர போரின் போது நாடே சிப்பாய் மங்கள் பாண்டேவின் பின்னால் ஆங்கிலேயருக்கு எதிராக திரண்டது. ஆனால் அப்போது முஸ்லீம் லீக் என்ற வைரஸ் உருவானது. அது நாட்டை இரண்டாகப் பிரித்தது. இப்போது காங்கிரஸ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் எல்லா இடங்களிலும் பச்சை கொடிகள் முளைத்துள்ளது. ஜாக்கிரதை! என குறிப்பிட்டுள்ளார். 

இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. யோகி ஆதித்யநாத் என்ற வைரஸ் உ.பி.யில் வளர்ச்சியை தடுக்கிறது. மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் இந்த வைரஸை திருத்தினார்கள். இந்த வைரஸ் இந்த தேர்தலில் முற்றிலுமாக அழிக்கப்படும் என காங்கிரஸ் செய்தியாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

Next Story