தேர்தல் அறிக்கைகள் வெளியீடு சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி போட்டி போட்டு வாக்குறுதிகள்


தேர்தல் அறிக்கைகள் வெளியீடு சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி போட்டி போட்டு வாக்குறுதிகள்
x
தினத்தந்தி 6 April 2019 10:45 PM GMT (Updated: 6 April 2019 8:25 PM GMT)

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்காக சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தங்கள் கட்சிகளின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்து உள்ளனர்.

அமராவதி,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து மாநில சட்டசபைக்கும் வருகிற 11-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக ஆளும் தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.

இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கும் நிலையில், இரு கட்சிகளும் நேற்று தங்கள் தேர்தல் அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டன. இதில் ஏராளமான இலவசங்கள் அள்ளிக்கொடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆண்டுக்கு ரூ.2 லட்சம்

குறிப்பதாக தெலுங்குதேசம் கட்சி தனது அறிக்கையில், தாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற மிகப்பெரிய திட்டத்தை அறிவித்து உள்ளது. மேலும் மத்திய அரசின் கிசான் சம்மன் திட்டத்தை தொடர்வதுடன் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை பணப்பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசின் பசுபு-கும்குமா திட்டத்தின் கீழ் சுயஉதவி குழு பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இலவச உயர்கல்வி, வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.25 லட்சம் வரை மானியம் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த அறிக்கையை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு இதுபோன்ற தாராள திட்டங்களை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது எனக்கூறினார்.

இலவச சிகிச்சை

முன்னதாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த அறிக்கையை வெளியிட்டார். இதில் கடந்த 2017-ம் ஆண்டு அவர் மாநிலம் முழுவதும் நடத்திய பாதயாத்திரையின் போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் சிறப்பம்சமாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் தாய்மாருக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை போன்ற முக்கிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன.

வக்கீல்களுக்கு உதவித்தொகை

இதைத்தவிர விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி, 2-வது ஆண்டில் இருந்து விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா ரூ.12,500 வழங்கப்படும். மேலும் நாளொன்றுக்கு 9 மணி நேரத்துக்கு இலவச மின்சாரம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைப்பு, 3 கட்டங்களாக மதுவிலக்கு அமல் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இளநிலை வக்கீல்களுக்கு ரூ.60 ஆயிரம் உதவித்தொகை, ரூ.100 கோடியில் வக்கீல் நலநிதி உருவாக்கம் போன்ற புதிய திட்டங்களையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சுயஉதவி குழு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் வட்டியில்லா கடன், 45 வயதுக்கு மேற்பட்ட தலித் பிரிவு பெண்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு இரு கட்சிகளும் பெரும் தாராளத்தை அறிவித்தாலும் விவசாயக்கடன் தள்ளுபடியை இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story