நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதாவுக்கு எதிரான அணிகள் ஒன்று சேரும் இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதாவுக்கு எதிரான அணிகள் ஒன்று சேரும் இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 8 April 2019 3:45 AM IST (Updated: 8 April 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், பா.ஜனதாவுக்கு எதிரான அணிகள் ஒன்று சேரும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

கோவை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாஜ்பாய் அரசுக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியில் தலித்துகள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு ஏற்றவாறு மத்தியில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. கல்வி நிறுவனங்களையும் செயல்பட வைக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பீகார், டெல்லி, கர்நாடகம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டு உள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் மெஜாரிட்டி இல்லாத நிலையில் பா.ஜனதா ஆட்சி உள்ளது. தென்னிந்தியாவில் பா.ஜனதா வெற்றி பெறாது.

பா.ஜனதா ஆட்சியில் ராணுவம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மதவாத கொள்கை கொண்ட பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு பின்பு, பா.ஜனதாவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும்.

தமிழ்நாட்டில் பா.ஜனதாவிடம், அ.தி.மு.க. சரண் அடைந்துவிட்டது. அ.தி.மு.க. அரசின் ஊழல்களை வைத்து பா.ஜனதா மிரட்டி பணிய வைத்துள்ளது. இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கும், பா.ஜனதாவுக்கும் எதிரான அலை உருவாகியுள்ளது.

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது தவறான முடிவு. அங்கு அவர் தோற்கடிக்கப்படுவார். கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story