ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்தது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்தது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கும் முன்பு வரை பத்திரிகைகளில், டி.வி.களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் கொடுக்கலாம். அதன் பின்னர் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது.
சி விஜில் செல்போன் செயலி மூலம் 1,954 புகார்கள் வந்தன. அவற்றில் 834 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 84 புகார்களின் உண்மை இல்லை என்று கைவிடப்பட்டன. 36 புகார்கள் நிலுவையில் உள்ளன.
பெயர் மாற்றம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டது தொடர்பாக வக்கீல் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அரசியல் கட்சிகள் எதுவும் புகார் அளிக்கவில்லை. பெயர் மாற்றத்துக்கான அனுமதியை மார்ச் 9-ந் தேதியன்று மத்திய அரசு வழங்கியது.
அதைத் தொடர்ந்து அதுபற்றிய அறிவிப்பாணையை வெளியிடுவதற்கான அனுமதியை மார்ச் 23-ந் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது. இதுதொடர்பாக புகார் வந்துள்ளதால் அதுபற்றி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.
பதற்ற வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் 7,780 பதற்றம் மற்றும் மிக பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகள் உள்ளன.
வேலூர் சோதனை தொடர்பாக வருமான வரித்துறையின் அறிக்கை கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்ற முகாந்திரம் இருப்பதாக கருதி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
யார்-யார் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என்ற விவரம் அதன் பின்னர் தெரிய வரும். ஒரு தொகுதியில் பிடிபடும் பணத்தின் அளவின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்யவோ, நடத்தவோ இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்வதில்லை. ஆனால் அங்கு நடக்கும் குற்றத்தின் தன்மையை உணர்ந்து, திருப்தி அடைந்தால் மட்டுமே அங்கு தேர்தலை ரத்து செய்வது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
போலீசார் நியமனம்
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பாதுகாப்பு பணியில் 63 ஆயிரத்து 951 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் 27 ஆயிரத்து 400 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






