சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதியில் 77% வாக்கு பதிவு


சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதியில் 77% வாக்கு பதிவு
x
தினத்தந்தி 11 April 2019 3:54 PM GMT (Updated: 11 April 2019 3:54 PM GMT)

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதியில் 77% வாக்குகள் பதிவாகி உள்ளன.

சத்தீஷ்காரில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.  அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த தன்டேவாடா தொகுதியில் பிரசார பணிகளுக்காக பாதுகாப்பு வாகனங்களுடன் நேற்று முன்தினம் சென்றார்.

அவரது வாகனம் சியாம்கிரி கிராமம் அருகே சென்றபொழுது நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.  இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் 4  பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 100 நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், சத்தீஷ்காரில் முதற்கட்ட தேர்தல் இன்று நடந்தது.

இந்த தேர்தலில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடந்த சியாம்கிரி பகுதியில் (தன்டேவாடா மாவட்டத்தின் பஸ்டார் நகரில் உள்ள பகுதி) உள்ள வாக்கு பதிவு மையங்களில் மக்கள் திரண்டு வந்து அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றுள்ளனர்.

இதன்படி, இங்கு 77% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story