வேனில் அமர்ந்தபடி வாக்குகள் கேட்டார் சென்னையில் விஜயகாந்த் பிரசாரம் ‘மு.க.ஸ்டாலினை நம்பினால் ஏமாற்றமே’ என்று பேச்சு


வேனில் அமர்ந்தபடி வாக்குகள் கேட்டார் சென்னையில் விஜயகாந்த் பிரசாரம் ‘மு.க.ஸ்டாலினை நம்பினால் ஏமாற்றமே’ என்று பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 9:11 PM GMT (Updated: 15 April 2019 9:11 PM GMT)

சென்னையில் விஜயகாந்த் வேனில் அமர்ந்தபடி வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். மு.க.ஸ்டாலினை நம்பினால் ஏமாற்றமே என்று அவர் பேசினார்.

சென்னை,

ஒவ்வொரு தேர்தலின்போதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக அவருடைய மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

எனினும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு தே.மு.தி.க.வினர் மத்தியில் இருந்து வந்தது. அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்வார் என்று தே.மு.தி.க. தலைமை அறிவித்தது.

அதன்படி மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து வேனில் சென்று விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார வேனில் வேட்பாளர்கள் நின்றபடி இருக்க, விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்திருந்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே விஜயகாந்த் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர், ‘இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னது போன்று, பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை நீங்கள் வெற்றி பெற செய்யவேண்டும்.’ என்றுக்கூறி சில நொடிகளிலேயே தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இதனால் பொதுமக்கள், தொண்டர்களை பார்த்து கும்பிட்டப்படி சைகை மூலமாக வாக்குகள் கேட்டார்.

இதையடுத்து பெரவள்ளூர் பகுதியில் விஜயகாந்த் பேசும்போது, “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்கவேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். எனவே நல்ல உள்ளம் படைத்த அழகாபுரம் மோகன்ராஜூக்கு வாக்களியுங்கள்” என்றார்.

விஜயகாந்த் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தங்களுடைய வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று தே.மு.தி.க.வினர் ஏங்கி தவித்திருந்தனர். இந்தநிலையில் அவர் பிரசார களத்துக்கு வந்ததால், தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்தனர். வழிநெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

Next Story