தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டம் பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி


தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டம் பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேட்டி
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 9:16 PM GMT)

தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.

சென்னை,

பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.

காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனமூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.

தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.

நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார்.

Next Story